சர்வதேச தொழிலாளர் தினம்





 சர்வதேச ரீதியில் தொழிலாளர் தினம் மே மாதம் 1ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இத்தினமானது தொழிலாளர்களை பெருமைப்படுத்துவதோடல்லாமல் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஓர் வாய்ப்பினை வழங்குகின்றது.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் . சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ருஸ்யாவில் சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இத்தினமானது தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் நாளாக காணப்படுகின்றது.

தொழிலாளர்களின் உரிமைகள்

1. ஒவ்வொரு தொழிலாளிக்கும் தான் விரும்பிய வேலையினை           செய்வதற்கு   உரிமை உண்டு.
2. ஏந்த பாகுபாடும் இல்லாமல் சம ஊதியம் பெறுவதற்கு தொழிலாளிக்கு உரிமை உண்டு.
3. வேலைத்தளத்தில் பாதுகாப்பு மற்றும் :சுதந்திரம் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு
4. அனைத்து தொழிலாளர்களும் தங்களின் நலனை பாதுகாத்துக்கொள்ள தொழிற்சங்கங்களில் இணைய உரிமை உண்டு.
5. சுகவீன நேரங்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளவும் அதிக வேலைப்பளுவின் இடைநடுவில் ஓய்வு எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.
6. தூய்மையடைந்திருக்கும் தொழிலாளிகள் தங்களின் பாதுகாப்பினை பேணிக்கொள்ளவும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்ளவும் உரிமை உண்டு
7. வேலை தளத்தில் பாதுகாப்பான சூழல் மற்றும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு என்பனவற்றை பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு
8. குறிப்பிட்ட நேரத்திற்கு அப்பாட்பட்ட வேலை செய்ய எந்தவொரு தொழிலாளியையும் நிர்ப்பந்திக்க முடியாது.
9. ஏந்தவொரு தொழிலாளியையும் இனம் ,பால்,வயது போன்றவற்றை கொண்டு பாரபட்சம் காட்ட முடியாது.

கருத்துகள்