அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி எனும் பெருமைக்குரியவர்




அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி எனும் பெருமைக்குரியவர் 








அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி எனும் பெருமைக்குரியவர் ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார்.
;
 1732 ஆம் ஆண்டு வர்ஜீனியாவில் வேக் ஃபீல்டு என்னும் ஊரில் ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தார்.இவர் பணக்காரத் தோட்ட முதலாளியின் மகனாவார்.இவர் 1753 முதல் 1758 வரையில் இராணுவத்தில் பணியாற்றினார். ஃபிரெஞ்சுப் போரிலும், சிவப்பிந்தியப் போரிலும் தீவிரப் பங்கேற்றார். அப்போது இவருக்கு இராணுவ அனுபவமும், புகழும் கிடைத்தன. இவர் 1758 இறுதியில் வர்ஜீனியாவுக்குத் திரும்பி, தமது இராணுவப் பதவியிலிருந்து விலகினார். அதன்பின் சிறிது காலத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்த மார்த்தாடாண்டிரிட்ஜ் கஸ்டிஸ் என்ற பணக்கார விதவையைத் திருமணம் செய்து கொண்டார். 
வாஷிங்டன் அடுத்த 15 ஆண்டுகள் காலத்தை தமது பண்ணைச் சொத்துகளை நிருவகிப்பதில் செலவிட்டார். இவர் மிகத் திறமையாகத் தம் சொத்துகளை நிருவகித்துச் செல்வத்தைப் பெருமளவு பெருக்கினார். 1774ஆம் ஆண்டில் நடந்த முதலாவது அமெரிக்கப் புரட்சிப் பேரவைக் (ஊழவெiநெவெயட ஊழபெசநளள) கூட்டத்திற்கு வர்ஜீனியாவின் சார்பாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்கக் குடியேற்ற நாடுகளிலேயே மிகப் பெரிய பணக்காரர்களுள் ஒருவராக இவர் விளங்கினார். 1775 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது அமெரிக்கப் புரட்சிப் பேரவைக் கூட்டத்தில் இவர் ஓர் உறுப்பினராகக் கலந்து கொண்டபோது, அமெரிக்கப் புரட்சி இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இராணுவத்தில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராகவும் விளங்கினார். ஆறடி இரண்டு அங்குலம் உயரமும் சட்டான உடலும், கவர்ச்சியான தோற்றமும் கொண்ட இவர் அஞ்சா நெஞ்சமுடையவராகவும் திகழ்ந்தார். இவரது நிருவாகத் திறமையையும் நாடு நன்கறிந்திருந்தது. அனைத்திற்கும் மேலாக, சிறந்த மனஉறுதி படைத்தவராகவும், ஒழுக்க சீலராகவும் இவர் விளங்கினார். அமெரிக்கச் சுதந்திரப் போராட்டம் நெடுகிலும் இவர் ஊதியம் பெறாமலேயே பணிபுரிந்தார். அந்தப் போராட்டத்தை ஈடிணையற்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் நடத்திப் பெரும் வெற்றி தேடித்தந்தார்.
அமெரிக்கப் புரட்சிப் படையின் தலைமைத் தளபதியாகப் பதவி ஏற்ற 1775 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதற்கொண்டு சுதந்திர அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தம் இரண்டாம் பதவிக் காலம் முடிவுற்ற 1797ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரையிலுமான காலத்தில் வாஷிங்டன் மிக முக்கியமான சாதனைகளைப் புரிந்தார். வர்ஜீனியாவில் வெர்னாம் குன்றிலிருந்த தமது இல்லத்தில் 1799 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் காலமானார்.
அமெரிக்கா ஐக்கிய நாடுகளை நிறுவியதில் வாஷிங்டன் பெற்றுள்ள முதன்மையான இடம், அவர் ஆற்றிய மூன்று முக்கியமான தொண்டுகளினால் கிடைத்ததாகும்.அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தில் வாஷிங்டன் வெற்றிகரமான இராணுவத் தலைவராக விளங்கினார். வாஷிங்டன் கூட சில சிறிய தோல்விகளைக் கண்டார். ஆயினும், அவர் அந்தத் தோல்விகளால் துவண்டு விடாமல் படைகளை ஊக்குவித்து விடா முயற்சியுடன் போரை நடத்தி இறுதியில் வெற்றி வாகை சூடினார்.அமெரிக்க விடுதலைப் போர் முடிவுற்ற பின்பு, அமெரிக்காவின் அரசமைப்பை உருவாக்குவதற்காக நடந்த மாநாட்டிற்கு வாஷிங்டன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாநாட்டில், அமெரிக்க அரசமைப்பை உருவாக்குவதில் வாஷிங்டன் கொள்கைகள் அவ்வளவாக எடுபடவில்லையெனினும், அரசமைப்பு ஆவணத்திற்கு மாநில அரசுகள் ஏற்புறுதியளிக்கும்படி செய்வதில் அவருடைய ஆதரவு, அவருடைய செல்வாக்கும் பெரும் பங்கு வகித்தன. அந்நாளில், புதிய அரசமைப்புக்குப் பெருமளவில் எதிர்ப்பு இருந்து வந்தது. வாஷிங்டன் மட்டும் தமது செல்வாக்கினை ஆணித்தரமாகப் பயன்படுத்தாமல் விட்டிருந்தால், அந்த அரசமைப்பு ஏற்கப்படாமலே போயிருக்கும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில், முதலாவது குடியரசுத் தலைவராக வாஷிங்டன் பணியாற்றினார். ஜார்ஜ் வாஷிங்டனைப் போன்று திறமையும் ஒழுக்க சீலமும் வாய்ந்த ஒரு மனிதரைத் தனது முதலாவது குடியரசுத் தலைவராகப் பெற்றது உண்மையிலேயே அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெற்ற மாபெரும் நற்பேறு எனக் கூறவேண்டும்.. புதிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றுமை குலைந்து சிதறுண்டு போகாமல் பேணிக்காக்கும் உறுதிமிக்கப் பெருந்தலைவராக வாஷிங்டன் திகழ்ந்தார். எனினும், ஆட்சியில் நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்ற பேராசை அவருக்கு இருக்கவில்லை. அவர் ஓர் அரசராகவோ, ஒரு சர்வாதிகாரியாகவோ ஆக விரும்பவில்லை. இரண்டு முறைக்கு மேல் குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க மறுத்து விட்டார். பதவியைத் துறப்பதற்கான ஒரு மரபினை அவர் வகுத்தளித்துச் சென்றார். அந்த மரபு இன்றுங்கூட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் முக்கியத்துவம் குறித்தும் ஒருவர் கொள்ளும் கருத்தினைப் பொறுத்துதான் இந்தப் பட்டியலில் ஜார்ஜ் வாஷிங்டன் பெறுகின்ற இடம் பெரும்பாலும் அமையும். அந்த முக்கியத்துவத்தை நடுநிலை நின்று மதிப்பீடு செய்வது ஒரு சமகாலத்து அமெரிக்கனுக்குக் கடினமான காரியமாக இருப்பது இயற்கையே. ரோமானியப் பேரரசு அதன் மாட்சிமையின் உச்சத்தில் இருந்த காலத்தில் எய்தியிருந்த இராணுவ வல்லமையையும், அரசியல் செல்வாக்கினையும் 20 ஆம் நூற்றாண்டின் மத்திய வாக்கில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எட்டியிருந்த போதிலும், அதன் அரசியல் அதிகாரம், ரோமானியப் பேரரசின் அரசியல் அதிகாரம், நீடித்த அளவுக்கு நீடிக்க இயலாது. மாறாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏற்பட்ட பல்வேறு தொழில் நுட்பச் சாதனைகள்தாம், மற்றப் பண்பாடுகளாலும், மற்ற காலங்களிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படும். 

கருத்துகள்