பெப்ரவரி 21 ‘சர்வதேச தாய்மொழி தினம்’

யுனெஸ்கோவால் 1999ம் ஆண்டில், பெப்ரவரி மாதம் 21ம் திகதி ‘சர்வதேச தாய்மொழி தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டது. தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும், பன்மொழிப் புலமையை ஊக்குவிப்பதற்கும் இத்தினம் உருவாக்கப்பட்டுள்ளது. மொழியானது நம்முடைய உணர்வுகள் மற்றும் எண்ணத்தை தெளிவாக ஏனையோருக்கு விளங்க வைக்க கூடிய அதி சக்தி வாய்ந்த கருவியாகும்.இத் தினமானது மொழி வேற்றுமையை ஊக்குவிப்பதற்காக கொண்டாடப்படவில்லை தாய்மொழியினை பெருமைப்படுத்துவதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகின்றது.அதுமட்டுமல்லாது பன்மொழி கல்வியை மாணவர்களிடையே ஊக்கப்படுத்துவதற்கும் , மொழியியல் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் , கலாசார பாரம்பரியம் மற்றும் புரிந்துதல் சகிப்பு தன்மை மற்றும் உரையாடல் அடிப்படையிலான ஒற்றுமையினை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

“பன்மொழி ஆற்றலானது, சமூகங்களுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதுடன், இனங்களுக்கிடையிலான கலாசாரப் புரிந்துணர்வுகளுக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் வழியேற்படுத்துகிறது” என்று யுனெஸ்கோவின் இயக்குனர் ஐரினா பொக்கோவா குறிப்பிட்டார்.
இவ்வருடத்தின் சர்வதேச தாய்மொழி தினத்தின் தொனிப்பொருளாக “தாய்மொழிக் கல்விக்கான புத்தகங்கள்” எனும் தலைப்பு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்மொழியிலான புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வீடுகளிலும், முன்பள்ளிகளிலுமே குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். இதன்மூலமே தாய்மொழி பற்றிய வலுவான சிறந்ததொரு அடித்தளத்தை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை ஒருவர் அறிந்திருப்பதானது அவருக்கு சமூக ரீதியான பிணைப்பை கட்டியெழுப்புவதற்கு வரப்பிரசாதமாக அமைகிறது. முதலில் தாய்மொழி, அடுத்து தேசிய அல்லது பிராந்திய மொழி, அதற்கடுத்து சர்வதேச மொழி. இவைகளின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு மனிதரும் அறிந்திருப்பது கட்டாயமாகும்.
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ ஸ்தாபனம், பாரிஸ் தலைமைக் காரியாலத்திலும், பிரான்ஸிலுள்ள எவ்ரி பல்கலைக்கழகத்திலும் விஷேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது

கருத்துகள்